1. மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் ஜூலை 27ம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் தரம் 11, 12, 13 ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜாங்கனை, வெலிகந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 3684 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு பகுதியில் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 25 வீடுகள் மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தலைமையில் குறித்த வீடுகள் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

4. கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 190 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகளுக்கு அமைய 60 வாகனங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,684 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

6. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 674 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதுவரை 2012பேர் குணமாகியுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.