1. இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது.

2. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சென்கிளையார் பகுதியில் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தலவாக்கலை சென்கிளையார் தோட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அருள் பிரசாத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

3. வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூடடுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை, டைனமெற், சுருக்குவலை, உழவு இயந்திரம் பாவனை ஆகியவற்றை நிறுத்துமாறு கோரி இன்றிலிருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி வரை மீனவர்கள் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

4. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் ´சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு´ என்ற புதிய பொலிஸ் பிரிவு ஒன்றை எதிர்வரும் சில நாட்களுக்குள் நிறுவப்பட திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

5. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கரங்களை பலப்படுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று புத்தளத்தில் கூறியுள்ளார்.

6. தேர்தல்கள் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 210பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 03 வேட்பார்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

7. ஹிங்குராங்கொடை காவல் நிலையத்தை சேர்ந்த 13 காவல் துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கந்தகாடு போதை பொறுள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. யாழ். கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது இன்று மதியம் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இராணுவ சிப்பாய் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

9. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இ.சிறி இராஜராஜேந்திரா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.