1. இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகளுக்கான புதிய திகதிகளை அறிவித்தார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2. கொரோன வைரஸ் தொற்றுக் காரணமாக பேனாக்கள் வாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படமாட்டாது என்பதால் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களார் நீலம் அல்லது கருப்பு குமிழ் முனைப்பேனா எடுத்துவரவேண்டும் என்பதோடு தனது அடையாள அட்டையை தனது கையிலேயே வைத்து அதிகாரிக்கு உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் உதவி ஆணையாளர் ரீ. ஹென்ஸ்மேன் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் அலுவலரின் கை வாக்காளரின் கைமீது படாது தூரிகை கொண்டு மை பூசப்படும். ஒருவருக்கு ஒரு தூரிகை என்ற ஒழுங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
3. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை பொருள் உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 400 கிராம் ஹெரோயின் போதை பொளும், 19 கையடக்க தொலைபேசிகள், 9 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிக்குரிய 165 மின்கலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
4. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலும் துசித்த குமார மற்றும் வெலிக்கடை காவற்துறை நிலைய தலைமை காவற்துறை பரிசோதகர் சுதத் அஸ்மடல ஆகியோரை ஆகஸ்ட் 20 ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5. கிளிநொச்சியில் நேற்றிரவு காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பிரிவில் சேவையாற்றும் 34வயதான விரிவுரையாளர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிந்திய செய்திகளின்படி யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்பபிரிவு விரிவுரையாளரான கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
6. நுகேகொடை மேம்பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த இராணுவ ஜீப்புடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் ஜீப்பின் சாரதியான இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த ஏனைய 2 சிப்பாய்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7. சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 26,000 சிறைக் கைதிகள் உள்ளதுடன் அவர்களில் 15,000 இற்கும் மேற்பட்டோர், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கைதிகள் என சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார். இதனால் சிறைச்சாலைகளுக்குள் ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்காக, சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.