1. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் பொதுத் தேர்தலில் தமது வாக்களிப்பை அந்த நிலையங்களில் இருந்தே எதிர்வரும் ஜுலை 31ம் திகதி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2. கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வரும் இரு தரப்பினர் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த ஐவரும் வெலிகந்த முகாமில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3. மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 1408 பேர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 1115 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 2523 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4. ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியல் அனைத்து முன்பள்ளிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ளார்.

5. வவுனியா ஓமந்தை கோவில்குளம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து 14 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தின் உரிமையாளர் இடத்தை சுத்தப்படுத்தும் பொழுது குண்டுகள் இருப்பதை அவதானித்து காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

6. நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட ஏனைய நான்கு பேரையும் கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

7. கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

8. ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை முதல் முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,000ற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

9. மத்திய கிழக்கு நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள 1,500 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சில காரணங்களுக்காக இலங்கையர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

10. சிறைச்சாலை முறைகேடுகள் தொடர்பில் பணி இடைநிறுத்தப்பட்டிருந்த நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனிருத்த சம்பயோ உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நீர்கொழும்பு மஜிஸ்திரேட் பிடியாணை பிறப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.