1. நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்றுகாலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை செயலாளர் பிரிட்டோ லெம்பேட்டினால் உத்தியோகபூர்வாமாக கையளிக்கப்பட்டது.

2. 2020 க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகஸ்ட் 31ம் திகதிக்கு முன் இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இதற்கான ஆலோசனைக்கு றறற.னழநநெவள.டம என்ற இணையத்திற்குள் பிரவேசிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

3. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 70 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

4. பாடசாலைகளில் நடத்தப்படும் தொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுப் போட்டிகளும் பயிற்சிகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

5. 11, 12 மற்றும் 13ஆம் தர வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த வகுப்புகளுக்கான பாடவிதான ஆசிரியர்களை மாத்திரம் அனுமதிக்குமாறும் பாடசாலைக் கல்வி செயற்பாடுகளை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை முன்னெடுக்குமாறும் சகல அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6. சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

7. பாலர் பாடசாலைகள் தொடர்பான விவகாரங்களை அமைச்சு ஒன்றின் கீழ் உள்வாங்க உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

8. வவுனியா- புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான கிரிதரன் வக்சலா (வயது 31) என்பவரைக் காணவில்லையென வவுனியா பொலிஸில் அவரது கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்ணைக் கண்டால் 0775255861, மோகன் – 0766327556, முகிசன் – 0778899787 ஆகியோருக்கு தெரியப்படுத்துமாறு குடும்பத்தினர் கோருகின்றனர்.

9. நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்ட சிறைச்சாலையின் அத்தியட்சகரை எதிர்வரும் 29ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

10. கொழும்பு கோட்டை ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மீடியாகொட மலவென்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய 10 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

11. ஐஸ் போதைப்பொருளுடன் சுங்கப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொலிஸாரால் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலயைச் சேர்ந்த 39 வயதுடைய அந்த சுங்க அதிகாரியிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும், 125 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

12. கேகாலை ருவன்வெல்ல பிரதேசத்தில் துப்பாக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை பொலிஸ் குற்றப்பதடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். அந்த வீட்டிலிருந்து ஐந்து துப்பாகிகளும் ஓரளவுக்கு பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இரு துப்பாகிகளும், துப்பாகி ரவைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

13. திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நகைத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென கஸ்தூரி நகர், மற்றும் திருஞானசம்பந்தர் வீதி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுகளையுடைய இருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

14. பொரளை – காசல் வீதியிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளரின் வீட்டிற்குள் நேற்று பிற்பகல் 01 மணியளவில் நுழைந்த நபர் 2000 அமெரிக்க டொலர்களையும் 10,000 ரூபாவையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

15. நாட்டில் இன்று மேலும் நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கண்காணிப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2768 ஆக உயர்வடைந்துள்ளது.

16. மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் நேற்று வைத்தியசாலை முன்பாக 1 மணிநேரம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

17. ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.