1. இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2. முகப்புத்தகத்தின் ஊடாக கொழும்பு புறநகர் பிலியந்தல – கெஸ்பேவ வீதியில் ஏற்பாடு செய்யட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களிடமிருந்து 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

3. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

4. நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2772ஆக அதிகரித்துள்ளது. தற்போது 656 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய இதுவரை ஒரு கோடியே 55 லட்சம் மக்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டதில் 6 லட்சத்து 34 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

6. நாட்டின் நாளை மறுதினம் முதல் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

7. கொழும்பு கொள்ளுப்பிட்டி சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட 54 வயது சந்தேகநபரான ஆசிரியர் 20ற்கும் மேற்பட்ட சிறுவர்களை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தெரியவந்துள்ளது. சந்தேகநபரினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் வீடியோக்களாக தயாரிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

8. மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்களை இன்று கொழும்பிற்கு அழைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடுவதற்காக இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.