1. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் வாக்களிப்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்தப்படவிருந்த நடமாடும் சேவை சாத்தியமற்ற நிலையில் திட்டமிட்டவாறு அது நடைபெறமாட்டாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

2. சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல்நீதிமன்ற விசேட நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இந்நீடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், ஒக்டோபர் 19ம் திகதி வரை வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

3. முன்னாள் அமைச்சர் ரிசாட் பதீயுதின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள வவுனியா காரியாலயத்தில் 5மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

4. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து இன்றுபிற்பகல் 2மணியளவில் வெளியேறியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க அவர் அங்கு இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.

5. மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்றுகாலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

6. மட்டக்களப்பு செங்கலடியில் இன்றுகாலை யாழப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடாத்தவிருந்த போராட்டம் பொலிஸார் நீதிமன்றின் ஊடாக பெறப்பட்ட தடையுத்தரவினால் இடைநிறுத்தப்பட்டது.

7. யாழ். அராலி, ஓடைக்கரைக்குளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், யாழ். வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர், பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

8. போதைப்பொருள் விற்பனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குவற்காக 1997, 1917 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழைப்பினை ஏற்படுத்தி அவை தொடர்பில் அறிவிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. காலி சிறைச்சாலையில் 245 கைதிகளிடம் இன்று Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவாதிருக்க சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

10. தன்னை கைது செய்வதை தடுக்கக்கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் தாக்கல் செய்த அடிப்படை மீறல் மனு மீதான ஆராய்வு நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

11. மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட மூவரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான விசாரணைக்குழுவிற்கு அழைக்கப்படமாட்டார்கள் என குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

12. கத்தாரில் சிக்கியிருந்த 55 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களுள் 8 பேர் சாதாரண பயணிகள் எனவும் ஏனையவர்கள் கப்பலில் பணியாற்றுவோர் எனவும், இவர்கள் அனைவருக்கும் Pஊசு சோதனைகளை நடாத்தி, தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் விமான நிலைய கடமை நேர முகாமையாளர் கூறியுள்ளார்

13. போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியாவில் 25வயது இளம் யுவதியொருவர் மகாறம்பைக்குளம் பகுதி வீடொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான அவரது துணைவர் என குறிப்பிடப்படும் ஒருவரும் கைதாகியுள்ளார்.