1. சுவிஸின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக், திருமலைக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார். திருமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு சென்ற அவர், ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து மாகாண அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினார்.
2. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடும் 54 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி தனது செயற்குழுவில் இருந்து வெளியேற்றியுள்ளது. அத்துடன் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆதரிக்காத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
3. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் இன்று அதிகாலை மீன்பிடிப் படகு காற்றினால் கவிழ்ந்ததில், மீனவர் ஒருவர் மீட்கப்பட்டதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார். கவிழ்ந்த படகும் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
4. போலியாக தயாரித்த ஆவணங்களுடன் வர்த்தக கப்பலில் சேவையாற்றுபவர் போல், டோஹா புறப்படவிருந்த விமானத்தில் ஐரோப்பியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற யாழ். கோப்பாயைச் சேர்ந்த 36வயதானவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
5. யாழ். போதனா வைத்தியாலையில் கடந்த 25ஆம் திகதி 2ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ஆம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
6. நாடாளுமன்றத் தேர்தலுக்கான சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளனவென இன்றுகாலை ஊடகத்திடம் தெரிவித்த மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன், மன்னரில்; 76 வாக்களிப்பு நிலையங்களிலும் 15 வாக்கு எண்ணும் நிலையங்களிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் நடைபெறவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
7. வவுனியா – சாளம்பைக்குளம் பகுதியில், நேற்று இரவு 9 மணியளவில், ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்களுக்கும் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8. வவுனியா பறநாட்டான்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கராஜா பால்ராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து ஓமந்தை சென்ற மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா சென்ற டிப்பரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
9. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 175 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரை 2296 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
10. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2,805 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
11. கட்டாரில் இருந்து இன்று காலை 10 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு வருகை தந்தவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12. திருகோணமலை தம்பலாகாமம் பகுதியில் தனது சகோதரரின் மனைவியின் தங்கையான 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய யூனிட் 08, முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரை அடுத்த மாதம் 4ம் திகதி வரை விளக்கமாறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டார்.
13. சிறைக் கைதிகள் சிலரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீண்டும் களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறைச்சாலை பேருந்தினுள் ஏற்றிக்கொண்டிருந்த போது நேற்று மதியம் சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை பேருந்தினுள் வீசிச் சென்ற நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
14. போலி கடவுச் சீட்டுக்களுடன் நேற்று இத்தாலி பயணிப்பதற்கு முயற்சி செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15. பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.