1. மன்னார் மாவட்டச் செயலக பணியாளர்களின் பாவனைக்காக ‘கொரோனா’ தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், சுகாதார முறைப்படி கை கழுவும் இயந்திரம் ஒன்று, மன்னார் உலக தரிசன நிறுவனத்தால், (வேல்ட் விசன்) நேற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிகாரியிடம் மன்னார் உலக தரிசன நிறுவனத்தின் (வேல்ட் விசன்) பிரதிநிதி ஒருவரால் கையளிக்கப்பட்டது.

2. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

3. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 21 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 2317 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

4. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,810 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5. கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர். பாரளை, ஹங்வெல்ல, பன்னலை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6. 2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அத்தோடு இரண்டாம் பகுதியில் உள்ள 4 வினாக்களில் 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதிமுதல் தரம் 1 தொடக்கம் 10 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஓகஸ்ட் 10ஆம் திகதி அனைத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கல்வியமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

8. 2016ம் ஆண்டு 6 வயதுச் சிறுமியை அவரது தாயாரிடமிருந்து கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

9. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை எதிர்வரும் 31ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து தொற்றாளர்கள் அதிகரித்தமையினால் கடந்த 15ம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது.

10. கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டோசன் வீதியில் குடும்பத்தகராறு காரணமான கணவன் தனது 53வயது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். நேற்று இரவு குறித்த கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய 39 வயதுடைய கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

11. நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்திருந்தனர்.