1. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் 10 மணிநேரத்துக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

2. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல, மிகவும் யோசித்து எடுக்கப்பட்டதே என, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியை பாதுகாப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

3. பிரித்தானியரிடம் இருந்து அதிகாரத்தை பெற்று நாட்டை கட்டியெழுப்ப டி. எஸ். சேனாநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு கட்சியான ஐ.தே.கட்சியை பாதுகாக்கவேண்டும் என, ரவி கருணாநாயக்க கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நான்கு – ஐந்து குழுக்களில் முதலாவது குழுவினரின் பெறபேறுகளே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பலர் நீக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது குழுவினர் தொடர்பில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

4. யாழ். குப்பிளான் பகுதியில், கருத்து முரண்பாடு காரணமாக, கணவரைப் பிரிந்து வாழும் குடும்பப் பெண்ணைத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குத்தியவர் கைதாகியுள்ளார்.

5. திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தோப்பூரைச் சேர்ந்த 26வயதான சந்தேநபரை, ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

6. லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலகத்தை சேர்ந்த உத்தியோத்தர் ஒருவருக்கு PRC பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளருடன் நெருங்கிய தொடர்புடையவர் என கூறப்படுகின்றது.

7. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘அங்கொட லொக்கா’ எனப்படும் பாதாளக்குழு உறுப்பினரால், போதைப்பொருள் விநியோகத்துக்காக பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீகொட- நாவலமுல்ல மயான வீதி பிரதேசத்திலுள்ள அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு பண்ணையிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக, அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8. பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவின் சகோதரன் மற்றும் சகோதரியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அனுருத்த சம்பாயோ தலைமறைவாகி இன்றுடன் 08 நாட்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

9. யாழ். வடமராட்சி கடலில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிரான வழக்கின் கட்டளையை எதிர்வரும் 4ஆம் திகதி வெளியிடுவதாக பருத்தித்துறை நீதிமன்றம் இன்று அறிவித்தது. வெளிமாவட்ட மீனவர்கள் வடமராட்சி கடலில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவித்து வடமராட்சி மீனவர் சங்க சமாசங்கள், சட்டத்தரணி தி.சந்திசேகரன் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

10. பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலுக்கான 12,985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

11. வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பகுதியில் நேற்றிரவு நடமாடியபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

12. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்தப்பாலம் அருகில் ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றச் சென்ற ஒருவர் முதலை இழுத்துச் சென்று காணாமல்போயுள்ள சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. கொடுவாமடு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய கதிர்காமத்தம்பி மயில்வாகனம் என்பவரே இவ்வாறு முதலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளார்.

13. மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தியாய குளத்தில் தாமரைப்பூ பறிக்க தோணியில் சென்று தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நேற்றுப் பகல் இடம்பெற்றுள்ளது. திருப்பெருந்துறை 5ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவரே காணாமால் போயுள்ளார்.

14. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2333 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

15. ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் தொடர்பில் இரு சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. சுங்க ஆணையாளரினால் அதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

16. வெளிநாடுகளில் இருந்த மேலும் சிலர் இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத. அவர்களுள் 40 பேர் அபுதாபியில் இருந்தும் இருவர் டோஹாவில் இருந்தும் 77 பேர் சென்னையில் இருந்தும் வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

17. அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத – பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் நிமல் பியதிஸ்ஸ முதலிடம் பிடிப்பார். மாவட்டத்தையும் கைப்பற்றுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று தலவாக்கலையில் தெரிவித்தார்.

18. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை துறைமுக அதிகார சபை ஊடாக ஆராம்பிக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. தமது கோரிக்கை நிறைவேறும் வரை தமது சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என துறைமுகங்கள் அதிகார சபையின் பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ். சஞ்ஜீவன் தெரிவித்துள்ளார்.

19. பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளைமுதல் எதிர்வரும் 10ம் திகதிவரை இ.போ.ச வின் 5,300 பஸ்களைக் கொண்டு இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர, மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடமுள்ள 600 பஸ்களும் இந்த சேவையில் ஈடுபடவுள்ளன என்றார் அவர்.

20. கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் – சிலாவத்துறை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். மஞ்சளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவதற்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

21. தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது. தற்போது நாட்டில் 345 தேசிய பாடசாலைகள் உள்ளதாக செயலணியின் உறுப்பினரான கலாநிதி சுனில் ஜயரத்ன நவரத்ன தெரிவித்துள்ளார். எனினும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு தேசிய பாடசாலையேனும் இல்லாதுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

22. இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2814 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2811 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.