1. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. அதற்கமைய, பிரசார கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று பிரசாரங்களில் ஈடுபடல், துண்டுபிரசுரங்களை விநியோகித்தல், தேர்தல் பதாகைளை உப அலுவலகங்களில் காட்சிப்படுத்தல், சுவரொட்டி, விளம்பரம், பதாகைளை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2. இம்முறை பொதுத்தேர்தலில் புள்ளடியிடுவதற்கு தேவையேற்படின் பேனாவைக் கொண்டு சென்று பயன்படுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீலம் அல்லது கறுப்பு நிற குமிழ்முனைப் பேனாவை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

3. கொரோனா தொற்றால், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க முடியாதவர்களின் அனுமதிப்பத்திரங்களை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களாக கருதி, வாக்களிக்க அனுமதி வழங்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறான சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்களிப்பதற்காக பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

4. தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 7 வேட்பாளர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனரென, தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய, பொலிஸார் 10 பேருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் செப்டெம்பர் தொடங்கி 3 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வூட்டுவதற்காக இன்று விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஊடக சந்திப்பு இடம்பெற்றபோதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 180 ஆயிரம் சதுர பரப்பளவைக் கொண்டதாக இரண்டாவது பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. வருடாந்தம் சுமார் 9 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வசதிகளை இதன்மூலம் பெற முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

6. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மொஹமட் ரூமிக்கு எதிராக வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இருவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

7. இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 57 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கமைய இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்தையும் கடந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

8. வெல்லாவெளி, வக்கியெல்ல சின்னவத்தையைச் சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி என்பவர் குழந்தை பேறுக்காக, கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டு ஆண் சிசு பிறந்துள்ளது. சிசுவைப் பிரசவித்த தாய்க்கு, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் இச்சிகிச்சையால் தாய் இறந்ததாகவும் பெண்மணியின் உறவினர் தெரிவித்தார். இன்று மதியம் குறித்த வைத்தியசாலை முன்னால் ஒன்றுகூடிய இறந்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் இணைந்து நீதியைப் பெற்றுதரக் கோரியும் வைத்தியரின் அசமந்த நிலையை கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக கூறி 5 பேர், கல்முனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

9. மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு கிராமங்களுக்குள் புகுந்த யானைகள், வீடுகள் தோட்டங்களைச் சேதப்படுத்தியுள்ளன என, மக்கள் கவலை தெரிவித்தனர். கிரான் புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானைகள், வீடொன்றையும் தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளன

10. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி 95ஆவது வயதில் இன்று கொழும்பில் காலமானார்.

11. கொழும்பு தெமட்டகொட பிரதேச வீடொன்றிலிருந்து, 30 மில்லியன் ரூபாய் மற்றும் 1,40,000 அமெரிக்க டொலர்கள் பணம் பொலிஸாரால் கைற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 9.10 மணியளவில் கொழும்பு வடக்கு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பணம் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

12. மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 349 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய டுபாயிலிருந்து 335 இலங்கையர்களும் டோஹாவிலிருந்து 14 இலங்கையர்களும் நாட்டை வந்துள்ளனரென விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13. கொரோனா வைரஸின் உலக பரவல் தாக்கமானது, பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழு, கொவிட்-19 தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்ட மதிப்பாய்வு அறிக்கையை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

14. மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவின் களுவங்கேணி பகுதியில் கோவில் வளாகத்தில் இரு தரப்பினரிடையே நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இது அரசியலுடன் தொடர்புடைய பிரச்சனை அல்லவெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

15. கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் மற்றும் கட்டாரின் டோஹாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 349 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். துபாயில் இருந்து 335 பேரும் டோஹாவில் இருந்து 14 பேரும் தாயகம் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாட்டின் சீன முதலீட்டு வேலைத்திட்டங்களில் பணிபுரிவதற்காக சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து சீனப் பிரஜைகள் 29 பேர் நேற்றிரவு வருகை தந்துள்ளனர். நாட்டை வந்தடைந்த அனைவரும் Pசுஊ பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

16. இந்த வருடம் முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, 40 பல்தேர்வு வினாக்களைக் கொண்ட பகுதி -01 வினாத்தாளுக்கு பதிலளிக்க ஒரு மணித்தியாலம் வழங்கப்படவுள்ளது. பகுதி -02 வினாத்தாளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ.பூஜித்த தெரிவித்துள்ளார்.

17. கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றிரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2013ல் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும்போது உண்மைக்குப் புறம்பான விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்ததாக ஷானி அபேசேகரமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

18. ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அசிர இலங்கமகே இன்று பொது ஜன பெரமுவுடன் இணைந்துள்ளார். இதன்படி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

19. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொள்ளை சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகி உள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்தநிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.