ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 2,514 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 291 ஆக குறைந்துள்ளது. இன்றைய தகவலின்படி புதிதாக 75 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஆக பதிவாகியுள்ளதாக கோவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதில் புனர்வாழ்வு பெறும் கைதிகள் 482 பேர் மற்றும் அலுவலக ஊழியர்கள் 66 பேர் அடங்குகின்றனர்.

கொழும்பு வெலிகடை சிறைக்குள் பூனை ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறை முன்னால் உலாவிய பூனையை சிறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து சோதனைக்கு உட்படுத்தியபோது பூனையின் கழுத்தில் 1கிராம் 2மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொள் கட்டி தொங்கவிடப்பட்டு காணப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து இன்று அதிகாலை சுவர்மீது ஏறி தப்பிசென்ற 04 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற மற்றைய நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை – இந்திகஹதெனிய பகுதி சிறிய வனப்பகுதியிலிருந்து 4 கைத்துப்பாக்கிகளும் 8 மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்றுமுற்பகல் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரியின் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த டி-56 ரக 13 இரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழிலுக்காக சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 332 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதேபோல் உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 41 இலங்கை மாணவர்களும் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வணிகக் கப்பலில் பணிப்புரிவதற்காக 13 வெளிநாட்டு மாலுமிகள் இன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்கள் கட்டாரில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.