மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (28-வயது) என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த இளைஞனின் தாய் மாரடைப்புக் காரணமாக மரணித்துள்ளார். தாயின் இறுதிக் கிரிகைகளை கடந்த 21ம் திகதி நிறைவேற்றிய சந்தர்ப்பத்தில் ‘உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை. நானும் உன் பின்னால் வருவேனம்மா’ எனக் குறித்த இளைஞன் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்களில் வெளியேறிச் சென்ற இளைஞன் நேற்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். காட்டுப் பகுதிக்குச் சென்ற உறவினர்களில் ஒருவர் இந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் காட்டிற்குள் கிடப்பதை அவதானித்து அதனருகே சென்றபோது அவ்விடத்தில் இளைஞனின் சடலமும் அவ்விளைஞன் பாவித்த செருப்பு, தலைக்கவசம் என்பனவும் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.