இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இன்று நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வேட்பாளர்களும் தமது பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுக்கு பின்னர் அமைதி காலப்பகுதியாக அறிவிக்கப்படவுள்ளதால், பிரசார கூட்டங்களை நடத்துதல், வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரித்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், அலுவலகங்களில் பிரசார பதாகைகளை காட்சிப்படுத்துதல், சுவரொட்டிகள் மற்றும் அறிவித்தல்களை காட்சிப்படுத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவித்தலை மீறும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அமைதி காலப்பகுதியில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களை சுற்றிவளைக்கும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.