முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செஞ்சிலுவை சங்க வவுனியா கிளையின் முன்னாள் தலைவருமான சிவநாதன் கிசோர், அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிவித்த செஞ்சிலுவை சங்கத் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அன்டன் புனிதநாயகம், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஆராய்வதாக வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக, இலண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட வணங்காமண் கப்பலில் இருந்த பொருள்கள், அன்று இருந்த நிர்வாகத்தினரால் விற்கப்பட்டதாகவும் இந்த நிர்வாகத்தினருக்குச் சொந்தமான வாகனங்கள் வாடகைக்குப் பெறப்பட்டு, 75 ஆயிரம் ரூபாய் பணம் சம்பாதிக்கபட்டதாவும், சிவநாதன் கிசோரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.
இக் கருத்து அப்பட்டமான பொய்யெனத் தெரிவித்த அவர், இது தொடர்பான ஆவணங்களை பரீட்சித்துப் பார்த்தபோது, 2009ஆம் ஆண்டில், எந்தச் சந்தர்பத்திலும் அன்றறய தலைவர் ப. சத்தியலிங்கம், செயலாளர் வில்வராயா, பொருளாளர் தனபாலசிங்கம் ஆகியோரது பெயரில் எந்தவிதமான வாகனங்களும் வாடகைக்கு அமர்த்தப்படவில்லையெனவும் வெளியாரின் வாகனங்களே அமர்த்தப்பட்டிருக்கின்றன எனவும் கூறினார்.
அத்துடன், வணங்காமண் கப்பலில் வந்த காலாவதியாகிய சில பொருள்கள், தமது களஞ்சியத்தில் தற்போதும் வைக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அன்டன் புனிதநாயகம், அதில் அவ்வாறான நடவடிக்கைள் எவையும் இடம்பெறவில்லையெனவம் கூறினார். சிவநாதன் கிசோரின் இந்தக் கூற்றுக்கு எதிராக, மானநட்ட வழக்குத் தொடர்வதற்கான கோரிக்கை கடிதம் விரைவில் அவருக்கு அனுப்பப்படுமெனவும், அன்டன் புனிதநாயகம் என்றார்.