1. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,834ஆக அதிகரித்துள்ளது.
2. வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இரவு வேளையில் தங்கியிருக்கும் தேர்தல் அதிகாரிகள் புகைத்தல், மதுபானம் பாவித்தல் வேறு எந்தவித போதைப் பொருட்கள் மற்றும் லைற்றர் முதலானவற்றை எடுத்துச்செல்லுதல் முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
3. கைதுசெய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவை, ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4. வவுனியா ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால், பாதுகாப்பு கருதி, அந்தவாக்களிப்பு நிலையம் இரட்டை கலாசாரமண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
5. தேர்தலுக்காக காலி உடுகம தேர்தல் மத்திய நிலையத்துக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஆட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது ஆட்டோவின் சாரதி காயங்களுடன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6. யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதியில் வேகமாக வந்த ஓட்டோ வேக கட்டுப்பாட்டையிழந்து ஆஸ்பத்திரி வீதி மரியன்னை தேவாலயத்துக்கு அருகாமையில் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் வயோதிபப் பெண்மணி ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையெனத் தெரிவித்த, வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது என்றார்.
8. நாடு முழுவதிலும் உள்ள 44 பொலிஸ் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள பொது தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கான 5309 வாக்குபெட்டிகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாதுகாப்பாக எடுத்துச்செல்லபட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
9. இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 6 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
10. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் இணைந்து பொய் சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் அம்பிலிபிட்டிய பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றபின் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
12. நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்களை இன்று மற்றும் நாளைய (05) தினங்களில் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்களால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றிரவு 8 மணிவரை திறந்திருக்கும் என தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதான மற்றும் உப தபால் அலுவலகங்கள் நாளை மாலை 06 மணி வரையும் திறக்கப்படவுள்ளன.
13. கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தலுடன் தொடர்புடைய 196 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் 16 முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றவை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 6,932 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
14. மட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலையை கடத்தி விற்க முயற்சித்த குறித்த உத்தியோகத்தரை கைதுசெய்ததுடன் முருகன்சிலையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
15. கடந்த பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று மாலை ஒன்று கூடியது. முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடி இருந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இதில் கலந்து கொள்ளவேண்டி இருப்பினும் அவர் சமூகமளிக்கவில்லை.