ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5மணியுடன் நிறைவடைந்தன. இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமானது.

12, 985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும் இம்முறை பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.