எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தென் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் விமானிகள் இருவரும் அடங்குவதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. துபாயிலிருந்து வருகை தந்த இந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்ட போது விபத்திற்குள்ளாகியது. கொரோனா தொற்று காரணமாக துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களை அழைத்து வந்த விமானமே விபத்திற்குள்ளாகியது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 191 பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக கோழிக்கோடு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.