இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டுதேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசு கட்சி காரிலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ் அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

இடம்பெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பின்னடைவைக் கண்டுள்ளது. அதேவேளை எமது கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய நான் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். இதற்கான பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. எது எப்படியிருந்தபோதும் எமது தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக ஒரு உறுப்பினர் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தயார் என தெரிவித்திருக்கும் அந்த கூற்றினை முற்றாக நிராகரிக்கின்றேன். எந்த விதத்திலும் இவ்வாறான அறிக்கைகள் விடுவது கட்சியின் கட்டுக்கோப்பிற்கும் விசுவாசத்திற்கும் எதிரானது.

கட்சியினுடைய தலைமையிலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. அந்தவகையில் நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்போம். இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் ஜனநாயக அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைவர் சம்மந்தன் ஜயாவை சந்தித்து மக்கள் எனக்கு ஆணை வழங்கவில்லை என்ற அடிப்படையிலே பொதுச் செயலாளர் பதவியை நான் துறக்க அனுமதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

இதற்கு அவர் உடனடியாக பல தேர்தல் கடமைகள் பொதுச் செயலாளருக்கு இருப்பதாகவும் இது தொடர்பாக எமது பொதுச் சபை தான் முடிவு எடுக்கவேண்டும் என்பதால் நீங்கள் பதவியை துறக்ககூடாது என கட்டளையிட்டதன் அடிப்படையில் நான் தொடர்ந்து இந்த பணியை செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை யாருக்கு வழங்குவது என பல்வேறு கருத்துப்பரிமாற்றப்பட்டது. இருந்தபோதும் தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசிய பட்டியல் தயாரிக்கும் போது சிலருக்கு கொடுக்கப்படவேண்டும் என்று இருந்தது.

இருந்த போதும் இப்போது இருக்கின்ற நிலமையிலே ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளுக்கு அப்பால் சென்று செயற்பட வேண்டியதன் அவசியம் இருக்கின்றது. ஆகவே இதில் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து இந்த விடயங்களை தெரிவித்தோம் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கமைய நேற்று சம்மந்தன் ஜயா வீட்டில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தலைவருக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இதற்கமைய தேசிய பட்டியலை அம்பாறையிலுள்ள அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என்பதற்கமைய முடிவின் பிரகாரம் இன்று காலை நான் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபையைச் உறுப்பினரும் முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான தவராசா கலையரசன் பெயரை பரிந்துரை செய்து தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளேன் என அறிவித்தார்.