நடந்து முடிந்துள்ள தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்பதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், ஏனைய பதவிப் பொறுப்புகள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மாநாடும் பொதுக்குழுவுமே, கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கும் என்றும் பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புகள் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில், தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார இழப்புக்களையும் அவலங்களையும் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர் என்றும் தொடர்ந்து வரும் இந்த அவலங்களுக்கு இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில், ​த.தே.கூ ஒரு ஜனநாயக வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் எனினும் கூட்டமைப்பின் பின்னடைவு தொடர்பாக, அதன் தலைமை விரைவில் கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழரசுக் கட்சியின் உயர்பீடமும் அடுத்து மத்திய செயற்குழுவும் கூட்டப்பட்டு, தேர்தல் காலத்திலும் தேர்தல் காலத்துக்கு அண்மித்த காலப்பகுதியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பாக பூரணமாக விசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் அதன்படி நடவடிக்கைக்குழு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மிகவிரைவில், தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பாக தமிழரசுக் கட்சி உயர்மட்டக் குழுவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவும் தனித் தனியே ஆராய்ந்து கூட்டாக முடிவை அறிவிக்கவுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.