கொரோனா வைரஸ் சவால்களில் இருந்து மீண்டுவந்து, பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்திய உடனடியாக உதவிக்கரம் நீட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.இந்திய சுதந்திரத்தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்தியா சுதந்திரமடைந்ததன் 73ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடும் இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் உள்ள சக இந்தியர்களுக்கும் இலங்கையின் நட்புமிகு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொவிட்-19 சவால்களிலிருந்து மீண்டு வந்து அண்மையில் வெற்றிகரமாக பொதுத் தேர்தல்களை நடத்தியிருந்தமைக்காக இந்திய மக்களின் வாழ்த்துக்களை இலங்கை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

மிகவும் ஆழமான நாகரீகம், பன்முகத்தன்மை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட  ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், இலங்கையும் காணப்படுகின்றன. மிகவும் நெருக்கமான இவ்விரு நட்பு நாடுகளும் வலுவான ஆன்மீக, கலாசார உறவுகளை கொண்டிருக்கின்றன.

இரு நாடுகளையும் உலகத்துடன் இணைக்கும் கடல் மற்றும் நிலம் ஆகியவற்றின் பாதுகாப்பு மீது புராதன காலம் முதல் கொண்டிருக்கும் பகிரப்பட்ட ஆர்வம் ஆகியவற்றை நோக்கிய பொதுவான இலக்கின் அடிப்படையிலும் இரு நாட்டு மக்களினதும் பங்குடைமையின் அடிப்படையில் பல ஆண்டுகள் பழமையான  இரு தரப்பு உறவானது மேலும் வலுவடைந்துள்ளது.

இந்த உறவின் மீது  இரு நாடுகளினதும் தலைவர்கள் கொண்டிருக்கும் வலுவான ஈடுபாடு, உயர் மட்ட முன்னுரிமை ஆகியவை  இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்ச்சியான விஜயங்கள், சம்பாஷனைகள் ஆகியவற்றினால் மேலும் வலுவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர்களின் தலைமைத்துவம், வழிகாட்டல்கள் காரணமாக இந்தியா ஒரு வர்த்தக முதலீடு, அபிவிருத்தி சார்ந்த பங்காளராக மாத்திரம் இல்லாமல் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக உதவிக்கரம் நீட்டும் நாடாகவும் உள்ளது.

மிகவும் அண்மையில், கொவிட்19 சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மருந்துகள், இரு நாடுகளினதும் துறைசார் நிபுணர்கள் இடையிலான மெய்நிகர் கலந்துரையாடல்கள் ஆகியவை  உதவியிருந்தன.  இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக ஒரு தொகுதி மருந்து பொருட்களுடன் புனித வெசாக் வாரத்தின்போது நான் வருகை தந்திருந்தேன்.

இலங்கையின் முன்னேற்றம், பொருளாதார முயற்சி ஆகியவற்றில் இந்தியாவின் ஈடுபாட்டினை கூறும் மற்றொரு உதாரணமாக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் அறிவிக்கப்பட்டமையை  குறிப்பிடமுடியும்.
ஒவ்வொரு சவால்களும் ஒவ்வொரு வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றன.

கொவிட்19 நோய்க்கு எதிராக இந்தியாவின் பரந்த ஆற்றல் மூலமாக “ஆத்மநிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா) பொருளாதார மீட்சிக்கான பாரிய திட்டங்கள் ஆகியவற்றை காணமுடிந்தது.   கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இந்தியர்கள் உலகின் சகல பகுதிகளிலிருந்தும் இந்திய அதிகாரிகளின் உதவியுடன் சொந்த நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். திறன்களைக் கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொரு முயற்சிகளையும் பயன்படுத்துவதற்கும் நம்பிக்கையுடனான எதிர்காலத்திற்காகவும் இந்தியாவின் செய்தி மிகவும் ஆணித்தரமானதாகும்.

வழமை போலவே இந்தியாவின் முயற்சிகள் எந்த சந்தர்ப்பத்திலும் சகல நண்பர்கள் மற்றும் பங்காளர்களுக்கு உதவுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இந்தியாவின் அயலவர்க்கு முன்னுரிமை கொள்கையானது இந்தியாவின் வளர்ச்சியில் அனைவரும் பங்குதாரர்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை விஞ்ஞானமும்  ஆன்மீகமும், கல்வியும் விளையாட்டும், சுகாதாரம்  மற்றும் பாதுகாப்பு ஆகிய பரந்துபட்ட துறைகளில் வளர்ச்சியடைந்து வரும் இந்திய -இலங்கை ஒத்துழைப்பானது பிராந்தியத்தினதும் இந்திய இலங்கை மக்களினதும் நிலையான அமைதி மற்றும் செழுமைத் தன்மைக்கு தனது பங்களிப்பினை வழங்கும்.

இந்த சுதந்திர தினத்தில் “ஸர்வே பவந்து சுஹினா” (அனைவரும் மகிழ்வுடன் இருப்போம்) மற்றும் சப்பே சத்தா பவந்து சுகிதத்தா (அனைவரும் மகிழ்வுடனும் ஆரோக்கியமாகவும் துயரங்களின்றியும் இருப்போம்) ஆகிய சிந்தனைகளை உணர்ந்துகொள்வதற்காக எம்மை மீள அர்ப்பணிப்போம்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.