இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரையில் 185,118 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், முப்படையினரின் கீழ் இயங்கி வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரையில் 30,524 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இப்போது குறித்த மையங்களில் 4,756 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் நால்வர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதன்படி, இதுவரை தொற்றுக்கு உள்ளான 2,890 பேரில் 2,666 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர். நாட்டில் வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.