பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

பின்பற்றப்பட வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகைள எடுப்பதற்கு துணை வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் அறையொன்றில் தங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எந்தவொரு தடையுமின்றி மாணவர்கள் வழமை போன்று விடுதியில் தங்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதியின் அறையில் தங்கும் மாணவர்கள் குறிப்பிட்ட வருடத்தை சேர்ந்த மாணவர் குழுவாக இருக்கவேண்டும் எனவும் ஏனைய ஆண்டு மாணவர்களை கலப்பாக இருக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் விடுதிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வருபவர்களின் பெயர் விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.