மட்டக்களப்பு திருகோணமலை வீதி மாங்கேணி பிரதேசத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாங்கேணியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். மாங்கேணி பிரப்பையடிமடு பிரதேசத்தில் இருந்து மாங்கேணி கடற்கரையில் மீன் பிடிப்பதற்கு துவிச்சக்கர வண்டியில் சகோதர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் மாங்கேணி புல்லாவி பிரதேசத்தில் வைத்து திருகோணமலையில் இருந்து வந்த காரில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மாங்கேணி பிரப்பையடிமடுவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சபாபதி சிவனேஸ்வரன் (வயது28) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த அதேயிடத்தைச் சேர்ந்த உயிரிழந்தவரின் சகோதரரான சபாபதி ரவியேந்திரன் (வயது22) என்பவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.