1. முல்லைத்தீவு – மல்லாவியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 19வயது இளைஞரான மல்லாவி பகுதியைச் சேர்ந்த தாணுயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

2. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு புதிய பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அமைச்சரவை பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சரவையின் இணை பேச்சாளர்களாக ரமேஷ் பத்திரண மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3. யாழ். மயிலிட்டி பகுதி தனியார் காணி ஒன்றில் இன்று ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை, காணி உரிமையாளர் காணியைத் துப்புரவு செய்த போது, மண்ணுக்குள் புதையுண்ட நிலையில், டி-56 ரக துப்பாக்கி ரவைககள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து இன்று இராணுவத்தினரும் பொலிஸாரும் ரவைகளை மீட்டுள்ளனர்.

4. யாழ். கோண்டாவில் ரயில் நிலையக் களஞ்சியத்தில் நேற்றுமுன்தினம் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் களவாடப்பட்டுள்ளன. ரயில் திணைக்களப் பணியாளர்கள், களஞ்சியசாலையை பார்வையிட்டபோதே, அது உடைக்கப்பட்டு பொருள்கள் களவாடப்பட்டமையை அறிந்துள்ளனர்.

5. யாழ். தொண்டமனாறு மூன்று சந்தியில் நேற்றிரவு 7.45 மணியளவில் சைக்கிள் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், தொண்டமானாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது 50) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

6. தொழில் ஒப்பந்தம் காலாவதியான பின் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு கொரியாவில் தங்கியிருக்கும் 1500 இலங்கையர்கள் இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

7. கொவிட் 19 பரவல் காரணமாக இந்நாட்டிற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 421 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் இங்கிலாந்தில் இருந்து இன்று அதிகாலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

8. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிகிச்சையளிக்கும் மற்றும் புனர்வாழ்வளிக்கும் பொலநறுவை கந்தகாடு மற்றும் சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையங்களுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட கொவிட் 19 நோயாளர்களில் 567 பேர் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த மத்திய நிலையங்களுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட 629 கொவிட் 19 தொற்றாளர்களில் 62 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

9. பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.