மேலும் 10,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வேலைவாய்ப்பு பெற்ற பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப்படாத பட்டதாரிகள் தங்களின் மேன்முறையீட்டை எதிர்வரும் 02ம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்க முடியும் என பொதுச்சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கோ அல்லது தங்களின் அமைச்சிலோ மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என பொதுச்சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார்.

வேலைவாயப்பு பெற்ற பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த 17ம் திகதி இணையத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு முன் வெளியிடப்பட்ட பட்டியலில் தங்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், 17ஆம் திகதி வெளியிடப்பட்ட பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.