9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்றுகாலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர். இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்கஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார். பின்னர் பாராளுமன்றம பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தியுள்ளார். இதேவேளை 09வது நாடாளுமன்ற சபை தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன கடமையினை பொறுப்பேற்றுள்ளார். அத்துடன் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடமையேற்றுள்ளார்.

இது இவ்விதமிருக்க பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக 223 உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பலத்தை பெற்றுக் கொண்டது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அபே ஜனபல கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், முஸ்லிம் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்முறை பாராளுமன்றத்தில் தலா 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரையில் தெரிவு செய்யப்படவில்லை என்பதனால் அவர்களின் ஆசனங்கள் வெற்றிடமாகவே காணப்பட்டன.

இந்நாட்டின் பழமை வாய்ந்த மற்றும் பிரதானமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.