மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோவிலுக்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வட, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி உட்பட பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1990ஆம் ஆண்டு, இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு, முறக்கொட்டான்சேனை பிரதேசங்களின் மக்கள் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போது,

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.