இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து கடந்த 20ம் திகதி வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரை 12 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். குருணாகலை, மாவத்தகம, வேவுட பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் இரணவில சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்த பெண், புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தார் எனவும் இவர் இருதய பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் கொடிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொள்ள பெண்ணின் உறவினர்கள் சிலர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.