வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம், கடந்த 22ம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டது. குறித்த முதியவரின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் காணப்பட்ட நிலையில் கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

உடற்கூற்று பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த முதியவரின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருந்ததுடன், அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19, 18 வயதுடைய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.