வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர எபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.

இரு நிகழ்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்,

அதனைத் தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து,மலரஞ்சலியும் செலுத்தினர்.

அத்துடன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் யாழ் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அவரின் உருவச் சிலை முன்னால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அங்குள்ள உருவச்சிலைக்கு முன்பாக அம்மன்னனின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கும் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுதினம் இன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பண்டாரவன்னியன் உருவச்சிலை வளாகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பண்டாரவன்னியனின் திருவுருவப்படம் தாங்கி பவனியாக வருகை தந்த நிகழ்வு குழுவினர் பண்டாரவன்னியன் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி வைத்து பண்டார வன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் வருகை தந்த அதிதிகளால் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும்

பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் மற்றும் பண்டாரவன்னியன் அறங்காவலர் குழுவின் உறுப்பினர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.