இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றுகால 10.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. வவுனியா குருமண்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசு கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கான சுயாதீனக் குழுவைவொன்றை நியமிப்பது தொடர்பான தீர்மானம்,

தேர்தல் காலத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் விவகாரத்தில் கட்சியின் பொதுச் செயலர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக இன்றுபிற்பகல் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் தெரிவு தொடர்பில் கட்சியின் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமை, கலையரசனை தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு தெரிவுசெய்த விடயத்தை கட்சி தலைவருக்கு கூட தெரியாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்தமை மற்றும் ஊடக சந்திப்பை தன்னிச்சையாக நடத்தியமை உள்ளிட்ட காரணங்களுக்காகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கலையரசனின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், பொதுக் குழுவிற்கான திகதியை தீர்மானித்து விரைவில் புதிய செயலாளரை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.