‘சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக நாம் இழந்தவை பல, இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம். இந்த விடயத்தில் நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது.

நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு ஆதரவு கொடுத்தனர் என்பதை மறந்துவிட வேண்டாம்’ இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை கூறினார். அவர் மேலும், ‘வலிந்து காணமால்போனோர் தினம் எதிர்வரும் 30ம் திகதி வருகின்றது, காணமால் போனோர் எங்கே என்ற கேள்வியுடன் ஒரு வருடகால போராட்டத்தை எமது மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அதேபோல் சமுர்த்தி செயற்திட்ட உதவியாளர்கள் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும், போர் சூழலில் தமது கல்வியை கற்றவர்கள் போர் சூழல் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் அவர்களுக்கு கொடுத்த பணிகள் தேர்தல் காலத்தில் இடைநிறுத்தப்பட்டது. எனவே இது முன்னைய அரசின் வேலைத்திட்டம் என்பதை கருத்தில் கொண்டு நிராகரிக்கிக்காது அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

அதேபோல் முன்னாள் அமைச்சரும் இப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் ஒன்றினை கூற விரும்புகின்றோம். நீங்கள் கொண்டுவந்த வீட்டுத்திட்டம் இடை நடுவே கைவிடப்பட்டுள்ளது. இந்த சபையில் பல்வேறு காரணிகளுக்கு குரல் கொடுக்கும் நீங்கள் எமது மக்களின் வீட்டுத்திட்ட விடயத்திலும் குரல் கொடுக்க வேண்டும்.

அதேபோல் இந்த கணக்கறிக்கையில் இராணுவத்திற்கு அதிக நிதியும் அத்தியாவசிய தேவைகளுக்கு குறைந்த நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எமது பிரதேசங்களில் அத்தியாவசிய தேவைகள் இருந்தும் சோதனை சாவடிகளை அமைத்து மக்களை நெருக்கடியை ஏற்படுத்தத்தான் இந்த நிதியா என்ற சந்தேகமும் எழுகின்றது. அதேபோல் நுண்கடன் விடயத்தில் எமது மக்கள் நெருக்கடியில் உள்ளனர்.

வட்டி அதிகரித்து நுண்கடன் பிரச்சினையில் மக்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். மேலும் விக்கினேஸ்வரன் ஐயா தனது உரையில் தமிழ் முன்னுரிமை குறித்து பேசிய போது எதிர்க்கட்சி அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்துவது வேதனையளிக்கிறது. தமிழ் மக்கள் நம்பிக்கையோடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர்.

என்னுடைய மண்ணை எனது மொழியை பாதுகாக்கும் விடயத்தை எவரும் தடுக்க முடியாது. எனது மொழி தமிழ் மொழி என்பதை கூறுவதிலும் முதன்மை மொழி என்பதையும் கூறுவதில் பெருமை உண்டு. சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் எமக்கு தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததின் காரணமாக பல விலைகொடுத்துள்ளோம்.

இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம். நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு கைகொடுத்து கௌரவத்தை ஏற்படுத்தினர் கொடுத்தனர் என்பதை மறந்துவிட வேண்டாம். எமது மொழியை இழிவுபடுத்த வேண்டாம். அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருந்தாலும் கூட நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது.

அதேபோல் நாம் அரசாங்கத்திற்கு ஒன்றினை கூறிக்கொள்ள விடும்புகின்றோம், இந்தியா எப்போதுமே எமக்கான நிற்கும் நாடு. அவ்வாறு இருக்கையில் இன்று ஆளும் தரப்புடன் செயற்படும் பௌத்த பிக்கு சிலர் இந்தியாவை மிகவும் மோசமாக விமர்சிப்பதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். ஏனைய ஆண்டுகளுடன் அரசாங்கம் எவ்வாறு நட்புறவை கையால்கின்றதோ அதேபோல் இந்தியாவையும் கையாள வேண்டும்’ – என்றார்.