சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதி ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை பேரணி சென்றடைந்தது. இதன்போது வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினாரால் மனித உரிமைகள் ஆணைய உயர்ஸ்தானிகருக்கான மகஜர் அருந்தந்தையர்கள் சின்னத்துரை லீயோஆம்சொங், ம.ரெக்ஸ் மற்றும் அருட்சகோதரி அண்ரனிற்ரா மாற்கு ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை கிளிநொச்சியிலும் மாபெரும் கவனஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் சென்றுள்ளனர். 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மைக்கேல் பேச்லெட் ஜெரியாவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, எங்கள் பிள்ளைகளை கொடு, சட்டத்தை கையில் எடுக்காதே போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர். மட்டக்களப்பிலும் பாரிய போராட்டமொன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.