கண்டி தலாத்துஓயாவை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட அதிர்விற்கு 3 சம்பவங்கள் காரணங்களாக அமையலாம் என விசாரணைக்குழு அனுமானித்துள்ளது.கற்குவாரியில் வெடி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வு இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறில்லை எனின் சுண்ணாம்பு கற்பாறை உடைந்து வீழ்ந்திருப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விக்டோரியா உள்ளிட்ட அதனை அண்மித்த நீர்த்தேக்கங்களில் ஏற்பட்ட உயர் நீர் அழுத்தம் மூன்றாவது காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அதிர்வினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி தலாத்துஓயாவை அண்மித்த சில பகுதிகளில் நேற்றிரவு 8.34 மணியளவில் சிறியளவில் அதிர்வொன்று பதிவாகியது. திகன, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளிலேயே அதிர்வு பதிவாகியுள்ளது. எனினும் இதுவொரு நிலநடுக்கம் அல்லவென புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருக்குமாயின், தமது பணியகத்தின் கீழுள்ள 05 மத்திய நிலையங்களில் அது குறித்து பதிவாகியிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.