ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர் ((Mark Esper) ஆகியோருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கொரோனா தொற்றினை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் சமீபத்திய முடிவுக்கு அமெரிக்க செயலாளர் ஜனாதிபதியை வாழ்த்தியுள்ளார். மேலும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். பொதுவான இருதரப்பு பாதுகாப்பு முன்னுரிமைகளை மறுஆய்வு செய்த அவர்கள், இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளனர்.

இரு தலைவர்களும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.