வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று குறித்த இருவரும் முல்லைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன நேற்று அதிகாலை 3 மணியளவில் தீயில் எரிந்துள்ளன.

தமது வாகனங்கள் தீயில் எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர் தீயை அணைக்க முயன்ற நிலையில் முச்சக்கர வண்டி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மோட்டர் சைக்கிள் சிறிய சேதத்துடன் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிப்படுத்தலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில், பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.

இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் கார் ஒன்றுடன் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதி மன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.