இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2020) புதன்கிழமை காலை 07.00 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு. க.தர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றதுடன், பேராசிரியர் திரு. க.கந்தசாமி (தகுதிவாய்ந்த அதிகாரி, யாழ். பல்கலைக்கழகம்), திரு. ந.விஜயசுந்தரம் (பிரதம ஆசிரியர், வலம்புரி) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நன்றியுரையினை அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றினார்.

நிகழ்வில் பேராசிரியர் சிறீசற்குணராஜா (யாழ். பல்கலைக்கழக உபவேந்தர்), தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், நகரசபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உயர்பீட அங்கத்தவர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு. செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் க.தர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இன்றுமாலை கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுக் கூட்டமும் நடைபெற்றது. கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது தெல்லிப்பளை ஸ்ரீதுர்;க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்கள். \