பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை இலங்கைக்காக நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் இன்று காலை சந்தித்துள்ளார். 9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இவர்கள் கலந்துரையாடியிருந்தனர்.

எதிர்காலத்தில் பாராளுமன்ற அங்கத்தவர்களின் பகிர்வுகள் தொடர்பான பரஸ்பர நிலைபாடுகளையும் தூதுவரும் சபாநாயகரும் கலந்துரையாடியிருந்தனர்.

முன்னர் ஒஸ்லோ நிலையத்தின் நிகழ்ச்சித் திட்டமொன்றின் அடிப்படையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நோர்வே பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து, வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்ததுடன், அதனூடாக கைகோர்த்த செயற்பாடுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் நோர்வே கொண்டிருக்கும் செயன்முறைகள் பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

பல்வேறு நாடுகளிலிருந்து கிடைக்கும் பிரயோக அனுபவங்களினூடாக கற்றுக் கொள்ளும் பாடங்களின் முக்கியத்துவத்தை தூதுவர் வலியுறுத்தியிருந்ததுடன், வௌ;வேறு பாராளுமன்றங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் கையாளப்படும் விதம் தொடர்பில் அறிந்திருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமது பாராளுமன்ற அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட விடயங்களை பகிர்ந்து கொள்வதில் நோர்வே ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார அபிவிருத்தி, கடற்தொழில், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் இலங்கைக்கும் நோர்வேக்குமிடையே பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் இவர்கள் கலந்துரையாடியிருந்தனர்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் நோர்வே தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹில்டே பேர்க்-ஹன்சன் மற்றும் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.