1. திருமலை சீனக்குடா விமான படை முகாமில் இன்றுகாலை மின்சாரம் தாக்கிய நிலையில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் நடைபெறவிருந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளின்போது ஏணியில் மின்சாரம் தாக்கியுள்ளது.

2. அழுகிய பழங்களை அனுமதிப்பதற்காக 60,000 ரூபா இலஞ்சம் பெற்ற பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை விநியோக பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

3. இந்தியாவிலிருந்து வருகை தந்து இருவர் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளார். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,114ஆகும்.

4. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக இன்று காலை முன்னிலையாகியிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 6மணிநேர வாக்குமூலம் வழங்கி வெளியேறியுள்ளார்.

5. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் சிக்கியிருந்த 198 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு-எல் 564 என்ற விமானத்தில் இன்றுபகல் நாடு திரும்பியுள்ளனர்.

6. தீ பரவியுள்ள MT New Diamond கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், நாட்டின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள அபாய நிலை இதுவரை நீங்கவில்லை. எரிபொருள் கசிவு ஏற்பட்டால், அது உலகின் சூழல் பேரழிவாக அமையக்கூடும் என கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

7. 20 ஆவது திருத்தத்தின் ஊடாக இந்த அரசாங்கம் நாகரிகத்திலிருந்து அநாகரிகத்திற்குள் பயணிக்கவே முயல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

8. முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 6மணிநேரம் சாட்சியம் வழங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

9. ஜப்பான் நிறுவன தொழில்வாய்ப்புக்காக இளைஞரிடம் நிதி மோசடி செய்ய முயன்ற சம்பவம் குறித்த வழக்கு நடவடிக்கைகளுக்குரிய சாட்சியினை வழங்க நீதிமன்றிற்கு வருகை தராமையினால் காலி மாவட்ட எம்.பி மனுஷ நாணயக்காரவிற்கு காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குணவெல பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

10. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர எதிர்வரும் 16 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

11. கடந்த பொதுத் தேர்தலின் போது நேருக்கு நேர் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் இன்று சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர்கள் இரவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

12. யாழ் சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் 8 கைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.