நியு டயமண்ட் மசகு எண்ணெய் தாங்கி கப்பலில், மீண்டும் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு மத்தியில், அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்புகளின்போது, கப்பலில் இருந்து நெருப்பு தனல் மற்றும் புகை வெளியேற்றம் என்பன அவதானிக்கப்படவில்லை என கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசேட படகு ஒன்றின்மூலம், குறித்த கப்பலை ஆழ்கடல் பரப்புக்கு கொண்டுசெல்லும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எம்.ரி நியு டயமண்ட் கப்பலானது தற்போது சங்கமன்கண்டி பகுதியில் இருந்து, 37 கடல்மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பரப்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று அதிகாலை 1 மணிமுதல் கப்பலுக்கு புகை விசுறும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கப்பல் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளளை எடுப்பதற்கு கடற்படையின் இடர்முகாமைத்துவ குழு இன்று நியு டயமண்ட் கப்பலுக்கு செல்லவுள்ளது. நியு டயமண்ட் கப்பல் உள்ள பகுதியிலிருந்து கடல் நீர் மாதிரி கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சமுத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பரிசோதிப்பதற்காக சென்ற விசேட குழுவினரால்கடல் நீர் மாதிரி கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த கடல் நீர் மாதிரி இன்று அரச இரசாயன பகுப்பாயிவிற்கு அனுப்பப்படவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனையின் மூலம் சமுத்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உறுதியாக கூற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நியு டயமண்ட் கப்பலை நேற்றைய தினம் மேலும் 9 கடல் மைல் தொலைவிற்கு நகர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த கப்பல் 37 கடல் மைல் தொலைவில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த கடற்பிராந்தியம் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.