MT New Diamond கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் வலயத்திற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கடல் மாசுபடுதலைத் தடுக்கும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலில் இருக்கும் எரிபொருளின் மாதிரியைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட மூன்று விடயங்களுக்காக குறித்த அதிகார சபைக்கு சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

இதேவேளை, தீப்பிடித்த MT New Diamond கப்பலின் கீழ் பகுதியை கடற்படையின் சுழியோடிகள் கண்காணித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியில் எஞ்சின் அறையிலுள்ள எரிபொருள் கசிந்து கடல் நீருடன் கலப்பதாக கடற்படையின் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

அதனால் அந்தப் பகுதியை கடற்படையின் சுழியோடிகள் நேற்று மாலை திருத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

கப்பல் தற்போது மட்டக்களப்பிலிருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ளது.

கப்பல் தொடர்பான செயற்பாடுகளை, அந்தக் கப்பலின் உரிமைக்குரிய நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுவதுடன், அதனை கடற்படையினர் அவதானித்து வருகின்றனர்.

இதேவேளை, கப்பலை மீட்கும் நிறுவனத்திடம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை இல்லாமற்போகும் அபாயமுள்ளதாக வர்த்தகக் கப்பல் நிபுணர் கெப்டன் இஷாரக பெரேரா எச்சரிக்கை விடுத்தார்.