யாழ் பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக நிர்வாணமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை செய்ய தவறுகின்ற மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென சிரேஷ்ட மாணவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.