நாட்டில் பல்வேறு நோய்களுக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணங்களை அதிகமாக உட்கொண்ட ஒரு இலட்சம் பேர் வரையில் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளால், போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சபையின் தலைவர் விசேட வைத்தியு நிபுணர் லக்நாத் வெலகெதர குறிப்பிட்டுள்ளார். சுமார் 3 இலட்சம் பேர் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளதுடன், அதில் பெரும்பாலானோர் கேரள கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். நாட்டில் 5 இலட்சம் பேர் வரையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருளை ஒழிப்பதற்கான பல நடவடிக்கைககள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவிக்கின்றது. பாடசாலை மாணவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு வழங்கப்படுவதாகவும் அனைத்து பிரதேச செயலக அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்படுவதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.