இந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் கொழும்பின் 4 பிரதான வீதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதிகள் நாளையிலிருந்து கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு நாளைமுதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோரை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். பஸ் முன்னுரிமை தடத்தில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கூடுதல் இடம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி 4 மருங்குகளை கொண்ட வீதியின் வலது புறத்தில் உள்ள முதலாம் மற்றும் இரண்டாம் ஒழுங்கைகள் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்;கள் பயணிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 3 மருங்குகளை கொண்ட வீதியின் வலது புறத்தில் உள்ள முதலாம் ஒழுங்கை பஸ்கள் பயணிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் ஒழுங்கையின் இரண்டாம் ஒழுங்கையில் வாகனங்களை முந்திச்செல்ல பயன்படுத்த முடியும்.

வாகன நெறிசல் அதிகம் காணப்படும் இடங்களில் அதாவது ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, பேஸ் லயின் வீதி, ஹய் லெவல் மற்றும் காலி வீதிகளில் வீதி ஒழுங்கு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. கடற்படையினரின் ட்ரோன் கமராக்கள் மற்றும் சீ.சீ.டி.வி மூலம் வீதி ஒழுங்கு நடைமுறைகள் கண்காணிக்கப்படவுள்ளது என்றார் அவர்.