கண்டி பூவெலிகடவில் தாழிறங்கிய ஐந்து மாடிக் கட்டடம், பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் தளர்வான மண் உள்ள பகுதியில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிசரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய தெரிவித்துள்ளார். பாரதத்தைத் தாங்க முடியாமையால் கட்டடம் தாழிறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.இதேவேளை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசியர் அதுல சேனாரத்ன, கட்டடம் தாழிறங்கிய இடத்திற்குச் சென்று கண்காணித்தார். இந்த இடத்தைச் சூழ வாழ்ந்த நான்கு குடும்பங்கள், தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய கூறினார்.

இந்த ஐந்து மாடிக் கட்டடம் தாழிறங்கியமைக்கு நில அதிர்வு காரணமல்ல என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார். கண்டி பூவெலிகட சங்கமித்ரா வீதியிலுள்ள இந்தக் கட்டடம் தாழிறங்கியதில் குழந்தையொன்றும் அதன் பெற்றோரும் உயிரிழந்தனர்.

அருகிலுள்ள வீடொன்றின் மீது கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த ஆறு பேர் சிக்கியதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மூவரை பாதுகாப்பாக மீட்டனர். வர்த்தகரான சமில பிரசாத்தும், அவரின் மனைவியான சட்டத்தரணி அச்சலா ஏக்கநாயக்கவும் அவர்களது மகளும் உயிரிழந்தனர். இவர்கள் கடந்த நவம்பர் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.