மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை அண்மையில் வசிக்கும் நாகராசா சதீஸ் (வயது 22) என்பவரே உயிரிழ்ந்துள்ளார். மேலும், மாவடிவெம்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) கருணாகரன் தனுசன் (வயது 26) ஆகியோர் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ள மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இடறுப்பட்டு மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்வேளையில் காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லொறியொன்றும் வீதியால் பயணம் செய்ததால் அந்த லொறியையும் கைப்பற்றி அதன் சாரதியிடமும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.