மன்னார் நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகளும் சான்றுப் பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. நானாட்டான் சந்திக்கு அருகில் ‘வடக்கு வீதி’ என்னும் இடத்தில் தனியார் காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, குறித்த பொருட்களுடன் பழமையான சட்டி, பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டு, அகழ்வின்போது மீட்கப்பட்ட பொருட்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் பாண்டிய மன்னர்களின் முடியாட்சிக் காலத்துக்குரியவை என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மீன் மற்றும் வாள் சின்னம் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகளும் மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.