ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றுஇரவு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது ஐக்கிய நாடுகளின் பொறுப்பு என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதே ஐக்கிய நாடுகளின் பொறுப்பு எனவும் இந்து சமுத்திரத்தில் அமைதியைப் பேணுவதற்காக செயற்படுவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்து சமுத்திரத்தில் பல கடல் மார்க்கங்கள் அமைந்துள்ளன. பிரதான கடல் மார்க்கம் அதிகளவிலான நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் பெரிதும் உதவுகின்றது. எனவே, இதனை பூகோள வணிகத்திற்காக திறந்து வைக்க வேண்டும். பூகோள அரசியலில் இந்து சமுத்திரம் உலகில் அவதானமிக்கதாகியுள்ளது.

இதனால் பலம் பொருந்திய நாடுகள் மத்தியஸ்த வலயமாக முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் இந்து சமுத்திரத்தின் பெறுமதியான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். நாடுகளின் இறைமையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதும் அதில் தலையிடாமல் இருப்பதும் ஐ.நா பிரகடனத்தின் முக்கியமான விடயம் எனவும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.