மாலபேயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் செயற்றிட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக Japan Today இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 15.3 கிலோமீட்டர் தூரம் கொண்ட குறித்த ரயில் செயற்றிட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தால் 48 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. சலுகை அடிப்படையில் வழங்க இணக்கம் காணப்பட்டிருந்த இந்தக் கடனுக்கான வட்டிவீதம் 0.1 ஆகும். 12 வருட கால கடன் தவணையுடன் திருப்பிச் செலுத்துவதற்கு 40 வருடங்களை வழங்க ஜப்பான் இணங்கியிருந்ததாக Japan Today குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த செயற்றிட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, செயற்றிட்ட அலுவலகத்தையும் உடனடியாக மூடும்படி ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதிபலன் கிடைக்கும் செயற்றிட்டமல்ல என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக Japan Today செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.